வீட்டிற்குள் நுழைந்தாலே
மனதை பிசையும் நியாபகங்கள் . . .
கலைந்து கிடைக்கும் பொருள்களில்
சமையல் பாத்திரங்களில்
மீதமிருக்கும் விரல் தடயங்களில் . . .
என்னதான் துவைத்தாலும்
சட்டையின் காலரில்
அழுக்கு போகத்தான் மறுக்கிறது . . .
தானே செய்யும் சமையலில்
உப்போ காரமோ அதிகமாவது
தவிர்க்கவே முடியவில்லை . . .
தூக்கமில்லா இரவுகளில்
நிலா பொம்மையும்
வாங்கி தந்த முதல் சேலையும்
பக்கத்தில் ஆறுதல் சொல்வது
தினசரி வாடிக்கையாகி விட்டது . . .
பிரியமானவர்களின் விசாரிப்பில்
"ஊருக்கு போயிருக்கிறா " என்பது
உதடுகளுக்கு பழக்கமாகி விட்டது . . .
இப்போதெலாம் கைபேசியின்
உரையாடல்களில்தான்
அன்பு தொடர்கிறது . . .
உள்ளங்கையில் ஏந்தியபடி
சிணுங்கும் குழந்தையின்
ரோஜாநிற உதடுகளுக்கு
கண்ணீரோடு முத்தமிடும்
அந்த அற்புத நிமிஷங்களுக்காக
சிலதை சகித்து கொள்ளத்தான்
வேண்டும் . . .
-பிரசவத்திற்கு போன மனைவி
திரும்பி வரும் வரை -

Fabulous ji
ReplyDelete